வம்ச புராணம்

பூர்வ ஜென்மத்தில் நாங்களெல்லாம்
கழுதைகளாக இருந்தோமாம்

பரண்பொருட்களுக்கிடையில்
பூசணம் பூத்துப் பதுங்கிக் கிடக்கும்
பழஞ்சுவடி ஆதாரம்
அவரவர்
இருப்பும் நடப்பும் அத்தாட்சி

எப்போதும் உண்மை
அதிர்ச்சியை அதிரச் செய்வது
எனினும் ஒருவேளை
சரியாகவும் இருக்கலாம்

குதிரையாக மாறும் முன்பு
விடுபட்ட  பிறவி
கழுதையாகப் பரிணமித்ததுபோல
பிசாசாகவோ கடவுளாகவோ மாறுவதற்கிடையே
மனிதர்களாகத் திரிக்கப்பட்டவர்கள் நாங்கள்

சொல்லக் கேட்ட பாட்டனின்
பார்த்துப் பழகிய அப்பனின்
பார்த்துப் பார்த்து அலுத்த என்
முகங்களில் தெரிகிறது
கைவிடப்பட்ட விலங்கின் துயரம்
கண்களில் ததும்புகிறது
வழிந்து விடாத  அப்பிராணிக் கண்ணீர்

எனவே
பழஞ்சுவடிச் சான்று ஒருவேளை
உண்மையாகவும் இருக்கலாம்

ஏழாம் பிறைபோல எனக்கும்
ஐந்தாம் பிறைபோலத் தந்தைக்கும்
மூன்றாம் பிறைபோலத் தாத்தாவுக்கும்
கழுதைக் கூன் முதுகுகளாம்

முதிர்ந்தவர்  வார்த்தை ஒருவேளை
மெய்யாகவும் இருக்கலாம்

பாட்டன் சுமந்தது பஞ்சுப் பொதி
அப்பன் சுமந்தது உப்பு மூட்டை
நான் சுமப்பது மண்பாரம்

எனினும்
எங்களை விட அதிகம் சுமந்தாலும்
கழுதையின் முதுகில் கூன் விழவில்லை,
ஏன்?

© N. Sukumaran
Producción de Audio: Goethe Institut, 2015