பெருந்தகையே, உமது ஆக்ஞை!

உமது உத்தரவுப்படியே
எல்லாம் நிறைவேற்றியானது பிரபோ,

நாவை அறுத்தோம்
மொழி மறைந்தது
பாதங்களைத் துண்டித்தோம்
நிலம் தொலைந்தது
விழிகளைப் பறித்தோம்
ஆகாயம் காணாமலானது
குறிகளை வெட்டினோம்
யோனிகளைக் குதறினோம்
தலைமுறை ஒழிந்தது.

பேரழிவிலிருந்தும் தப்பிய
ஒற்றையொற்றை  உதிரத் துளிகள்
மண்ணில் தெறித்து
தெறித்த மண்ணெங்கும் புதிதாய்ப் பிறந்தனர்

நம் கணக்குப் பிழைத்தது அங்கே
எனவே பிரபோ,
உமது ஆணையை
புதுப்பித்துப் பூர்த்தியாக்கினோம்.

பசித்தழும் பிஞ்சு உதடுகளுக்கும்
வற்றிய முலையின் காம்பில் துளிர்த்த
செவ்வெள்ளைப் பாற்சொட்டுக்கும் இடையில்
மரணத்தின்  வன்கரங்களை ஊடுருவ விட்டோம்
கொங்கைகள் திருகி எறியப்பட்டன
பூவிதழ்கள்  கசக்கிப் பிடுங்கப்பட்டன

துயர்மறக்க இணைதேடி விறைத்த குறிக்கும்
கருணையுடன் கசிந்த அல்குலுக்குமிடையில்
சீருடைப் பிசாசுகளைக் கூத்தாட விட்டோம்
புணரத் தடைவிதித்தும்  புணர நிர்ப்பந்தித்தும்
உடலின் சங்கீதம் சிதைக்கப்பட்டது

மழலைகளை முதுமையடைந்த சிங்கங்களுக்கும்
கிழங்களை இளம் புலிகளுக்கும் இரையாக்கினோம்
ஊர் துப்புரவானது

அவ்வாறாக
உமது ஆக்ஞைப்படியே
நாமன்றி யாருமில்லாத ஒரு பூமியை
வென்றெடுத்திருக்கிறோம் பிரபுவே,
ஒரு பிடிமண்ணும்
ஒரு துளிரத்தமும்
எடையிலும் நிறையிலும் விலையிலும் சமம்
அதுதானே பெருந்தகையீர் வரலாறு?

© N. Sukumaran
Audio production: Goethe Institut, 2015