N. Sukumaran

tamilisch

 

கடலினும் பெரிது

விரும்பியதை அடைய
ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள்

காலடி மணலில் பிசுபிசுத்த
முதல் கடலைத் தாண்டினேன்
பாதத்தில் புரண்டு கொண்டிருந்தது
இரண்டாம் கடல்
கணுக்காலைக் கரண்டிய
மூன்றாம் கடலை உதறித் தள்ளியும்
முழங்காலில் மண்டியிட்டது
நான்காம் கடல்
இடுப்பைக் வருடிய ஐந்தாம் கடலைப்
புறக்கணித்து நடந்தேன்
கழுத்தை நெரிக்க அலைந்தது  
ஆறாம் கடல்
தலையை ஆழ மூழ்கடித்து
உட்புகுந்து ஆர்ப்பரித்த
ஏழாம் கடலைக்
கொப்பளித்துத் துப்பியதும்
'வெற்றி உனதே, இனி
விரும்பியதை அடையலாம்' என்றார்கள்.

உப்பை ருசித்தபடிக் கேட்டேன்
'ஏழினும் பெரிய கடல் இல்லையா?'

© N. Sukumaran
Audioproduktion: Goethe Institut, 2015